நிலக்கடலை பயிரில் வல்லுநர் விதைக் குழு களஆய்வு

நிலக்கடலை பயிரில் வல்லுநர் விதைக் குழு களஆய்வு
X

பைல் படம்

வெள்ளாளவிடுதியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் விதை ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் வெள்ளாளவிடுதியில் உள்ள மாநில எண்ணெய்வித்துப் பண்ணையில் விதை ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி, வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் ச.சித்ரா மற்றும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் மு.தண்டபாணிஆகியோர்களால் நிலக்கடலை பயிரில் வல்லுநர் விதை உற்பத்திக்கான இரண்டாம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. நிலக்கடலையில் பூஞ்சணங்கள், நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் இலைப்புள்ளி நோய் நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதனை கருத்தில் கொண்டு நிலக்கடலை சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெள்ளாளவிடுதி மாநில எண்ணெய்வித்துப் பண்ணையில் கோ 7 மற்றும் டிஎம்வி 14 ஆகிய நிலக்கடலை இரகங்களுக்கு வல்லுநர் விதை உற்பத்தி செய்ய விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகமானது வல்லுநர் விதை உற்பத்தி பணியை அரசு விதைப்பண்ணையுடன் இணைந்து உற்பத்தி செய்து வருகிறது. வல்லுநர் விதை உற்பத்தி செய்யும் விதைப்பண்ணைகளை வல்லுநர் விதை குழுவால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரம் நிர்ணயம் செய்யப்படும். அதன்படி நிலக்கடலையில் வல்லுநர் விதைக் குழுவால் கள ஆய்வு பணிகள் பயிர் பூப்பூக்கும் பருவம், முதிர்ச்சி பருவம் மற்றும் குவியல் ஆய்வு என மூன்று நிலைகளில் (60, 90 மற்றும் 120 ஆவது நாட்களில்) ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் நிலக்கடலையில் முதிர்ச்சி பருவத்தில் வல்லுநர் விதை குழுவால் இரண்டாம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தால் 2013-ஆம் ஆண்டு கோ 7 நிலக்கடலை இரகமானது வெளியிடப்பட்டது. இது100-105 நாட்களில் அறுவடை செய்யகூடிய கொத்து வகை இரகம். மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தால் 2018 ஆண்டு டிஎம்வி 14 நிலக்கடலை இரகமானது வெளியிடப்பட்டது. இது 95-100 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய கொத்து வகை இரகம். மேலும் ஒரே மாதிரியான திரட்சி உடைய காய்கள் உடையதால் விவசாயிகளுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்ற இரகமாக விளங்குகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வல்லுநர் விதைகள் வெவ்வேறு நிலைகளைக் கடந்து விவசாயிகளுக்கு நல்ல முறையில் மானியத்துடன் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயத்தின் விதை தேவையை பூரத்தி செய்து நிறைவான வருமானத்தை பெற வழிவகுக்கிறது என வல்லுநர் விதைக்குழுவால் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு