புதுக்கோட்டை- தஞ்சை புதிய ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற எம்எல்ஏ கோரிக்கை
கந்தர்வகோட்டை சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை (பைல் படம்)
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூற்றாண்டுக் கனவுத் திட்டமாக இருக்கும் புதுக்கோட்டை- தஞ்சாவூர் இடையே புதிய ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய ரயில்வே துறை நிறைவேற்றித் தர வேண்டும் என கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) எம்.சின்னதுரை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான கடிதத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளர், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். மேலும், இந்தக் கடிதத்தின் நகல்களை, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை- தஞ்சாவூர் ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கந்தர்வகோட்டை தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு தனியே ஒரு ரயில் நிலையம் கிடைக்கும். அதன் மூலம் இந்த வழியாகச் செல்லும் ரயில்களில் எளிதில் பயணித்து புதுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
தினமும் தஞ்சாவூருக்கும், புதுக்கோட்டைக்கும் வேலைக்கு வந்து செல்லும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள்.மேலும், இந்தப் பகுதியிலுள்ள விவசாய விளை பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் வசதியும் கிடைக்கும். மேலும், இணைப்பு ரயில்கள் மூலம் வெளியூர்களுக்கும் சென்று வருவதற்கு கந்தர்வகோட்டை தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள்.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள புதுக்கோட்டை- தஞ்சை ரயில்பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட மத்திய ரயில்வே துறைக்கு உரிய முன்மொழிவுகளை அனுப்பி, நிதி பெற்று, விரைவாக செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu