காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல்:சிபிஎம் போராட்ட அறிவிப்பு வெற்றி
காவல் ஆய்வாளர்மீது நடவடிக்கைகோரி கந்தர்வகோட்டையில் சிபிஎம் எம்எல்ஏ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்
மக்களுக்கு எதிராக செயல்படும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல்..சிபிஎம் போராட்ட அறிவிப்பு வெற்றி
சாமானிய மக்களுக்கு எதிராகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உறுதியளத்துள்ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மின்னாத்தூர் அருகே ராமுடையான்பட்டி கிராமத்தைசேர்ந்தவர் செல்வராஜ். கடந்த மாதம் 13-ஆம் தேதி கந்தர்வகோட்டையில் உள்ள மண்டபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு வந்த மின்னாத்தூரைச் சேர்ந்த தங்கச்சாமி என்பவர் சாதிப் பெயரைச் சொல்லி மிகவும் தரக்குறைவாக திட்டிய உள்ளார். மேலும், அவரது கழுத்தில் துண்டை போட்டு முறுக்கி கன்னத்தில் அறைந்துள்ளார். அருகில் இருந்த நரகங்கிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ராஜ்குமார் ஆகிய இருவரும் இச்செயலை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் "ஊரில் பெரிய மனிதர்கள் மீது புகார் கொடுக்கும் அளவுக்கு உனக்கு திமிரா" எனத் திட்டி அவரது செல்போனையும் பறித்து வைத்துக்கொண்டதாகவும், சுமார் இரண்டு மணிநேரம் காக்கவைத்து நாகூசும் தகாத வார்த்தைகளால் திட்டி காவல்நிலையத்திலிருந்து அனுப்பி வைத்தாகவும் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனையடுத்து சாமானிய மக்களுக்கு எதிராகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமையன்று கந்தர்வகோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என திட்டமிட்டு துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது. போராட்டத்திற்கு தயாரான நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருமாறு காவல்துறையினர் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சனிக்கிழமை அன்று மாலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் குருநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன் ஏ. ஸ்ரீதர், த.அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் கே தங்கவேல், வி. ரத்தினவேல், டி.லட்சாதிபதி, எல்.வடிவேல் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பீமராஜ், டி.சலோமி, எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் சாதிய வன்கொடுமை நிகழ்த்திய குற்றவாளிகள் மீது முறையாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது எனவும், சாமானிய மக்களுக்கு எதிராகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் மீது விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கூடி இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையின் முடிவுகளை விளக்கி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் பேசினார். அவர் பேசும்போது, தமிழக முதலமைச்சர் பல சிறப்பான திட்டங்களை இந்த குறுகிய காலத்தில் நிறைவேற்றி வருகின்றார். இத்தகைய சூழ்நிலையில் காவல் துறைக்கு பொறுப்பாக இருக்கும் முதல்வருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில்மாறனின் செயல்பாடு உள்ளது. எனவே, தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வரும் செந்தில்மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேச்சுவார்த்தையில் நாங்கள் வலியுறுத்தினோம்.
நமது சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முன்னிலையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் நமது கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை நம்முடைய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். காவல்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டபடி குற்றவாளிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் போராட்டத்தை மீண்டும் தீவிரமாக முன்னெடுப்போம் என தெரிவித்தார். இதனையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu