கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை: எம்எல்ஏ- கோரிக்கை

கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும்  செயல்பட நடவடிக்கை: எம்எல்ஏ- கோரிக்கை
X

எம்எல்ஏ-சின்னத்துரை(பைல் படம்)

தொகுதிக்கு உள்பட்ட இம்மருத்துவ மனைக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர்.

கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து 24 மணிநேரமும் இயக்கும் மருத்துவமனையாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

25 ஆண்டுகளுக்கும் மேலாக கறம்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இது கடந்த 2015-ஆம் ஆண்டு தாலுகா மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது. எனது தொகுதிக்கு உட்பட்ட இம்மருத்துவமனைக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர்.

இம்மருத்துவமனைக்கு போதுமாக கட்டமைப்பு வசதிகள் இருந்தும் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் உள்நோயாளிகளாக தங்க வைக்கப்படுவதில்லை. சாதாரண சிகிச்சை களுக்குக்கூட புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மருத்துவமனைகளக்கு அனுப்பி வைக்கும் அவலம் தொடர்கிறது. அவசர சிகிச்சைக்கு மருத்துவர்கள் இல்லாததால் சில உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போன நிகழ்வுகளும் கடந்த காலங்களில் நடந்துள்ளன.

இதனால், கறம்பக்குடி பேரூராட்சி மட்டுமல்லாது அதைச்சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமான கோரிக்கை மனு அளித்து நேரிலும் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதலான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு சில மாதங்கள் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டது.

ஆனால், மீண்டும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பழைய கதையே தொடர்கிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களும், வணிகர்களும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

எனவே, கறம்பக்குடி தாலுகா மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரச சிகிச்சைப் பிரிவுடன் டயாலிஸிஸ், உடற்கூராய்வுக் கூடம், போதுமான அளவில் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட வசதிகளை எற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் எம்எல்ஏ- சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!