நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை

நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை
X

குலை நோய் தாக்கிய நெற்பயிர் (பைல் படம்)

காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது

நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் துறை ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது வானிலை மேகமூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைக் கட்டுப்படுத்திட கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

குலைநோயின் அறிகுறிகள்:நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரைத் தாக்குகிறது. இலைகளின்மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப் பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன்கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்றுசேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.

இந்நோய் தீவிரமாகத் தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது. நெற்பயிரின் கழுத்துப் பகுதியில் இந்நோய் தாக்கும்போது கறுப்பு நிறமாக மாறிக் கதிர்மணிகள் சுருங்கியும், கதிர்கள் உடைந்தும் தொங்கும். இந்நிலையில் இது 'கழுத்துக் குலைநோய்" எனப்படும். இந்நோய் நெற்பயிரின் கணுக்களில் தாக்கும்போது அவை கறுப்பு நிறமாக மாறி உடைந்துவிடும் நிலையானது 'கணுக் குலைநோய்" எனப்படும்.

மேலாண்மை முறைகள்:குலைநோயைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தல் வேண்டும். நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். நடவு வயலில் நோயற்ற நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வயலிலும் வரப்பிலும் உள்ள களைகளை அகற்றிட வேண்டும். இந்நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. என்ற மருந்து 200 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

புகையான்:புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி. சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற சிறிய இறக்கைகளைக் கொண்டிருக்கும். இப்பூச்சியானது நெற்பயிரின் தூர்களில் இருந்துகொண்டு நெற்பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது. இதனால் பயிர்கள் வட்ட வடிவில் திட்டுத்திட்டாகக் காயத் தொடங்கும். பின்னர் எரிந்து புகைந்தாற் போல் காணப்படும். மணிகளில் பால் பிடிப்பதற்கு முன்பாகவே காய்ந்துவிடுவதால் மணிகள் முற்றாமல் பதராகிவிடும். வயல்களில் நீர் தேங்கியுள்ள இடங்களிலும், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் இதன் பாதிப்பு அதிகமாகும். மேலும், நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலாண்மை முறைகள்:எனவே, விவசாயிகள் வயல் வரப்புகளைத் தூய்மையாக வைத்திருப்பதோடு, நெற்பயிரை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து செம்மை நெல் சாகுபடி முறையில் நட வேண்டும். அல்லது, எட்டடிக்கு ஓர் அடி இடைவெளியில் பட்டம் விட்டு நடவு செய்ய வேண்டும்.

வயலில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும். மேலும், யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை மேலுரமாக இடும்பொழுது பிரித்துப்பிரித்து இட வேண்டும். இவ்வாறு புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.புகையானின் தாக்குதல் அதிகமாகும்பொழுது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மி.லி. அல்லது தையோமீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் அல்லது இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல். 40 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் தூர்ப் பகுதியில் நன்கு படும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு நெற்பயிரில் தோன்றும் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திடுமாறும், மேலும் கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிடுமாறும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!