உதகையில் துடைப்ப புற்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர்
.இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், சீமார் புல் ( துடைப்பம்) அறுப்பு எங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என பழங்குடியினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் கிடைக்கும் கீரைகள், பழங்கள், சிறு விலங்குகள் வேட்டை ஆகியவையே, பழங்குடியின மக்களின் முந்தைய வாழ்வாதார நடைமுறையாக இருந்தது. சிறு வனப் பொருட்களை தேவைக்கேற்ப சேகரித்து விற்பனை செய்ய தொடங்கினர்.
அதன் பின்னர், சிறு விலங்குகள் வேட்டை தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், தேன் எடுத்தல், நெல்லிக்காய், சாதிக்காய், பூசங்கொட்டை, புளியங்கொட்டை, மரப்பாசி, சீமார் புல் ( துடைப்பம்) ஆகியவற்றை சேகரித்து விற்று வந்தனர். சிறு வன மகசூல் சேகரிப்பு சற்று குறைய நின்று போன நிலையில் இருக்கிறது. சில பொருட்கள் மட்டும், பல்வேறு இன்னல்களுக்கு இடையே சேகரிக்கப்பட்டு வருகிறது.
நெல்லிக்காய், சாதிக்காய், பூசங்கொட்டை, மரப்பாசி ஆகியவை ஒவ்வொன்றும் 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தவை. ஆனால், இன்று எட்டாக்கனியாக மாறிவிட்டது.பல சிறு வனப் பொருட்கள் சேகரிப்பு முற்றாக தடுக்கப்பட்டுவிட்டாலும், தற்போதும் வேலைவாய்ப்பை அளித்து வருகிறது சீமார் புல் அறுப்பு.முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லட்டி மலைப்பாதையிலுள்ள வனத்தில் சீமார் புல் அறுக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணியில், வனத்திலேயே கூடாரம் அமைத்து மசினகுடி அருகே சொக்கநள்ளி பகுதியைச் சேர்ந்த வனக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அறுக்கப்பட்ட புற்களை வனத்திலேயே உலர்த்தி, காய வைத்து, சீமார் உற்பத்தியில் பழங்குடியினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், தற்போது அவ்வப்போது மழை பெய்வதால், சீமார் புற்களை உலர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டு, அவை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பழங்குடியின மக்கள் கூறும்போது, "ஒரு மாதம் தொடங்கி 6 மாதங்கள் வரை சீமார் புல் அறுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
மலைப் பகுதிகளிலுள்ள சமவெளிப் பகுதிகளில்தான் சீமார் புல் விளைகிறது. அங்கேயே 3 முதல் 4 மாதங்கள் முகாமிட்டு சீமார் புல் அறுப்பு முடிந்து வீடு திரும்புவோம்.உண்ணிச் செடிகள் அதிகமாக வளர்ந்து, சீமார் புல்லை மூடி மறைத்து விடுவதால் இழப்பு ஏற்படுகிறது.சீமார் புல் சேகரிக்க செல்லும் வழித்தடம் மூடி மறைத்துள்ளதால், புல் அறுப்பு நின்றுவிட்ட பகுதிகளும் இருக்கின்றன.இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், சீமார் புல் ( துடைப்பம்) அறுப்பு எங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என பழங்குடியினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu