கொரோனா கட்டுப்பாடு: நீலகிரியில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்!
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு இன்று இரவு 10 மணி முதல், அதிகாலை 4 வரை ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும், உள்ளூர் மக்கள் வெளியூர் மக்களும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும் பூங்காக்களும், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் சுற்றுலா தலங்களும் இன்று முதல் மூடப்பட்டன. குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட இடங்கள், பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
பூங்காவில் புகைப்படம் எடுக்கும் தொழிலை செய்து வரும் நபர் கூறுகையில், தமிழக அரசு அறிவித்துள்ள சுற்றுலா தலங்களுக்கான தடையை சற்று தளர்த்தினால், தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும், சுற்றுலா இடங்களை நம்பி மட்டும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள், பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu