ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா முன்னேற்பாடு குறித்த கூட்டம்

ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா முன்னேற்பாடு தொடர்பான கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
உதகை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது
உதகை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நாளை முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், கோவிலுக்கு முன்பு வாகனங்கள் நிறுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 19.04.2022 தேரோட்டம் அன்று பக்தர்கள் அதிகமாக வருவதால் கோவில் உள்புறம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சுவாமி திருவீதி உலா லோயர் பஜார், மெயின் பஜார், காபிஹவுஸ் வழியாக கோவிலை வந்தடையும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும், போக்குவரத்தை சரிசெய்யவும் வேண்டும். திருவிழாவையொட்டி சீராக மின்சாரம் வினியோகிக்க மின்சார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேரோட்டம் அன்று தீயணைப்பு வாகனத்துடன் மீட்புக்குழு பணியில் ஈடுபட வேண்டும். சுகாதாரத்துறை மூலம் கோவில் முன்பு 108 ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.
தேர் செல்லும் பாதையான மார்க்கெட் நுழைவுவாயிலில் உள்ள நகராட்சிகள் கழிப்பிடங்களை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை கோவிலை சுற்றி கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு துறை மூலம் உபயதாரர்கள் மூலம் வழங்கும் அன்னதான உணவுகளை பரிசோதிக்க வேண்டும்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu