"ஊரடங்கு கட்டுப்பாடு எங்களுக்கு இல்ல" - உதகை, குன்னூரில் உலா வந்த கரடிகள்!

உதகை, குன்னூர் பகுதிகளில், ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியிருக்க, கரடிகள் சுதந்திரமாக உலா வந்தது, பொதுமக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் காலை நான்கு மணி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால், சுற்றுலா மாவட்டமான உதகையில் சுற்றுலாப் பயணிகள் வர முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரவு 8 மணிக்கு மேல் மக்களின் நடமாட்டம் 20 சதவீதமாக குறைந்தது.

இந்நிலையில் உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், கரடி ஓன்று சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், குன்னூர் அருவங்காடு பகுதியிலுள்ள கலைமகள் தியேட்டர் அருகில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் மற்றும் ஒரு கரடி, சாலையின் நடுவில் சர்வசாதாரணமாக திரிந்து கொண்டிருந்தது. இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் எல்லாம் மனிதர்களுக்குத்தான்; எங்களுக்கு அல்ல. நாங்கள் சுதந்திரமாக திரிவோம் என்பது போல் கரடிகள் நடமாட தொடங்கி இருப்பது, அப்பகுதி வாசிகளை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்