மண்சரிவு: மலை ரயில் இரண்டு நாட்கள் ரத்து
ஊட்டி ரயில் பாதையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் ஊழியர்கள்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதலே பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது. சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், தலைகுந்தா, பிங்கா்போஸ்ட், லவ்டேல், சாந்தூா், கேத்தி, பாலடா, கெரடா மட்டம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது.
குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொது மக்கள் சிரமம் அடைந்தனர்.
கனமழைக்கு குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 100 அடி உயரம் கொண்ட கற்பூர மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் மின்சாரத்துறையினர் விழுந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். மேலும் ஜே.சி.பி. வரவழைக்கப்பட்டு மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் காரணமாக 3 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்கு பிறகு மரங்கள் அகற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டன.
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்ததால் மலை ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயில், ஹில்குரோவ் பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்பு 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றினர்.
இதனால் 2 மணி நேரம் தாமதமாக மலை ரயில் குன்னூரை வந்தடைந்தது.
இருந்த போதிலும் மீண்டும் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நாளை (வியாழக்கிழமை) வரை மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஊட்டி-குன்னூா் இடையேயான மலை ரயில் வழக்கம்போல இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu