ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும், அதிகளவில் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கி, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பார்க், கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
மேலும் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து குடும்பத்துடன் பேசி மகிழ்ந்தனர். தனது குழந்தைகளுடன் அங்கு விளையாடியும் மகிழ்ந்தனர். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் 2 நாட்களில் 49,013 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் 2 நாளில் 29 ஆயிரத்து 611 பேர் வந்துள்ளனர்.
கடந்த 14-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 15,977 பேர் வந்திருந்த நிலையில் நேற்று 13 ஆயிரத்து 634 பேர் வந்திருந்தனர். கல்லாருக்கு நேற்று முன்தினம் 267 பேரும், நேற்று 910 பேரும் வந்தனர்.
கல்லட்டிக்கு நேற்றுமுன்தினம் 719 பேரும், நேற்று 1,339 பேரும் வந்திருந்தனர். ரோஜா பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 3,619 பேரும், நேற்று 4,783 பேரும், சிம்ஸ் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 2,360 பேரும், நேற்று 3,312 பேரும், தேயிலை பூங்காவுக்கு நேற்று முன்தினம் 792 பேரும், நேற்று, 1063 பேரும், அரோபிட்டத்திற்கு நேற்றுமுன்தினம் 117 பேரும், நேற்று 121 பேரும் வந்துள்ளனர்.
தொடர்ந்து விடுமுறை உள்ளதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்னும் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu