கூடலூர் அருகே சிறுத்தையை பிடிக்க கோரி கடை அடைப்பு, மறியல்

கூடலூர் அருகே சிறுத்தையை பிடிக்க கோரி கடை அடைப்பு, மறியல்
X

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

சிறுத்தை தொடர்ந்து அட்டசாகத்தில் ஈடுபட்டு வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் முதல் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. கடந்த மாதத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது.

இதில் மூவரும் பலத்த காயம் அடைந்து ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒரு பெண் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வனத்துறையினர் ஐந்து இடங்களில் கூண்டு வைத்தும், பல இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியும் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

கூடலூர் அடுத்த கொளப்பள்ளியை சேவீர் மட்டத்தை சேர்ந்தவர் வசந்த். இவருக்கு நான்கு வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். நேற்று சிறுமி, வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு புதர்மறைவில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென சிறுமியை தாக்கியது. இதில் சிறுமி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள், சிறுத்தையை சத்தம் எழுப்பி அங்கிருந்து விரட்டினர்.

தொடர்ந்து காயம் அடைந்த சிறுமியை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் சிறுத்தை தொடர்ந்து அட்டசாகத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை பந்தலூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!