குண்டும் குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க ஓவேலி மக்கள் இயக்கம் கோரிக்கை
குண்டும் குழியுமான சாலை
நீலகிரி மாவட்ட கூடலூர் தாலுகா, ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு பாலம் அருகே பழுதடைந்து கிடக்கும் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஓவேலி மக்கள் இயக்கம் சார்பில் நீலகிரி மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில், சுண்ணாம்பு பாலம் அருகே 500 மீட்டர் தொலைவுக்கு தார்சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
எனவே அவற்றை உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனாலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறை செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மேற்கண்ட பழுதடைந்த சாலையின்வழியாகதான் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வருகின்றன.
கூடலூர்-ஓவேலி நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்ட பகுதிகளை மேம்படுத்த வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
ஆனால் பல மாதங்கள் கடந்தபிறகும் மேற்கண்ட பழுதான சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே மத்திய-மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி ஓவேலி சுண்ணாம்பு பாலம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu