ஊட்டியில் 7.3 டிகிரி செல்சியஸ் பதிவு: கடும் குளிர், பனிப்பொழிவால் மக்கள் அவதி

ஊட்டியில் 7.3 டிகிரி செல்சியஸ் பதிவு: கடும் குளிர், பனிப்பொழிவால் மக்கள் அவதி
X

ஊட்டி உறைபனி

உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். துவக்கத்தில் ஒருமாதம் நீர்ப்பனி விழும். தொடர்ந்து உறைபனி கொட்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

இதுபோன்ற நேரங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

ஆனால் இம்முறை உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. மேலும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைபனி விழத்தொடங்கி உள்ளது.

இன்று ஊட்டியின் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 7.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக உள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, சூட்டிங்மட்டம், காமராஜ்சாகர் அணைக்கட்டு மற்றும் எச்.பி.எப் ஆகிய பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக காணப்பட்டது.

மேலும் பனிப்பொழிவு, குளிரால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். எனவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலைநேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!