உதகையில் 16 புதிய பேருந்துகள் சேவை தொடங்கிவைப்பு
நீலகிரி மாவட்டத்தில் ரூ.8.32 கோடி மதிப்பில் 16 புதிய பேருந்துகள் விரிவாக்க சேவை தொடக்க விழா உதகை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தார். திட்ட இயக்குநா் (சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்) கெளசிக் முன்னிலை வகித்தார். பேருந்து விரிவாக்க சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா், சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோர் தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் பேசியதாவது: உதகையில் மகளிருக்காக 11 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 99 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இலவச பயணத்தால் மிச்சமாகும் பணத்தில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும், மருத்துவச் செலவுக்கும் உபயோகமாக உள்ளதாக பெண்கள் கூறியுள்ளது மாநில திட்டக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது இந்த அரசின் சாதனை. நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டீசல் மானியத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முதல்வா் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் வரும் காலங்களில் அனைத்து இடங்களிலும் புதிய பேருந்துகளாக இயக்கப்படும் என்றார்.
சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் பேசுகையில், கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் பேருந்து விரிவாக்கம் இருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu