நஞ்சப்பன்சத்திரத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்கள் நினைவாக நினைவு சின்னம்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் அமைக்கப்படவுள்ள நினைவு சின்னம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணித்த ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிர் நீத்த நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது என ராணுவ அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய அதிகாரிகள் கூறுகையில், இந்திய முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.
அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மீட்புபணியில் ராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது. மேலும் அங்கு ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் ராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்று உள்ளது. இந்த நினைவுச் சின்னம் வருகிற டிசம்பர் 8ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu