குன்னூர் அருகே பட்டப்பகலில் வளர்ப்பு நாயை விரட்டிய சிறுத்தை
நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே அம்பிகாபுரம் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
குன்னூர் பகுதியில் வனத்தையொட்டி அம்பிகாபுரம் கிராமம் அமைந்து உள்ளது. எனவே காட்டுக்குள் இருக்கும் வனவிலங்குகள் நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருகின்றன. அப்போது அவை வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை அடித்து கொன்று தின்று விட்டு மீண்டும் காட்டுக்குள் தப்பி செல்கின்றன.
அம்பிகாபுரம் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் வீடுகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன்மூலம் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அம்பிகாபுரம் பகுதிக்கு பட்டப்பகலில் வந்த ஒரு சிறுத்தை, காளியம்மன் கோவில் அருகே வசிக்கும் முருகன் என்பவர் வீட்டுக்குள் கேட்டை தாண்டி குதித்து சென்றது. அப்போது வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு வளர்ப்புநாய், சிறுத்தையை பார்த்ததும் சத்தமாக குரைத்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கொல்வதற்காக பாய்ந்து சென்றது. இந்த நிலையில் அந்த நாய் லாவகமாக தப்பித்து ஓட்டம் பிடித்தது. எனவே சிறுத்தைப்புலி ஏமாற்றத்துடன் மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றது.
அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் அதிரடியாக புகுந்த ஒரு சிறுத்தை, அங்கு நின்ற வளர்ப்பு நாயை விரட்டி செல்வது அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அம்பிகாபுரம் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டி அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள், அம்பிகாபுரம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu