லக்கிஷா ஹப்பா திருவிழாவை பாரம்பரிய உடையில் கொண்டாடிய படுகர் இன மக்கள்
லக்கிஷா ஹப்பா திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக படுகரின மக்களின் கிராமங்களிலேயே பெரிய கிராமமாக ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமம் விளங்குகிறது.
இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி கார்த்திகை தீபம் கொண்டாடபட்ட நிலையில் பௌர்ணமி நாளன்று நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த படுகரின மக்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் நஞ்சநாடு கிராமத்திற்கு வந்து குவிந்தனர்.
இதனையடுத்து மாலை சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது பாரம்பரிய உடையான வெண்மை நிற ஆடைகளை பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அணிந்து தொட்டமனை எனப்படும் தங்களது மூதாதையர்கள் வசித்த வீட்டின் முன் குவிந்தனர்.
அந்த இல்லத்தில் இருந்து பந்தம் எடுத்து வந்து சிறிய கொடி மரங்களில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இளைஞர்கள் நடனமாடியவாறு ஊர் பெரியவர்கள் மற்றும் பூசாரி ஆகியோரை தொட்டமனையிலிருந்து கிராமத்தின் மைய பகுதியில் உள்ள கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் அமர்ந்து இருந்த நிலையில் சிறப்பு அலங்காரத்துடன் இருந்த பிரம்மாண்ட கொடி மரத்திற்கு பூஜை செய்து 60 அடி உயரத்தில் தீபம் ஏற்றபட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் கொடி கம்பத்தை சுற்றி பெரிய வட்டமாக நின்று தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu