குடியிருப்பு அருகே கொரோனா மையமா? கோத்தகிரி மக்கள் எதிர்ப்பு

கோத்தகிரியில், குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சக்தி மலை சாலையில், தனியார் பெண்கள் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு குறுகலான சாலையில், அதிக குடியிருப்புக்கள் நிறைந்துள்ளன.

தற்போது இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், குடியிருப்புவாசிகள் அனைவரும், மாவட்ட ஆட்சியரிடமும், வட்டாட்சியரிடமும் இதுகுறித்து மனு அளித்துள்ளனர். மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க செயல்படக் கூடாது என்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணி நடந்து கொண்டிருந்த நிலையில் , மருத்துவமனை முன்பு பொதுமக்கள் ஒன்று திரண்டு, எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பதாகைகளை ஏந்தி மருத்துவமனை முன்பு ஒன்று கூடி முழக்கமிட்டனர்.

தகவல் அறிந்து, காவல்துறை ஆய்வாளர் வேல்முருகன் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த இடத்தில் கொரோனா சிகிச்சை மையம் வராது என உறுதி அளித்ததின் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!