நீலகிரியில் கொட்டும் உறைபனியால் கடும் குளிர்: ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி
நீலகிரியில் உறைபனி
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். துவக்கத்தில் ஒரு மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து உறைபனி விழும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற சமயங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.
ஆனால் இந்த முறை உறைபனி அதிகம் விழவில்லை. அதேசமயம் கடந்த இரண்டு மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது. பகல் நேரங்களில் வேளையிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது.
அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்பிஎப் போன்ற பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.
பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், நீர்நிலை பகுதிகளில் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி இருந்தது. இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி உள்ளது.
கடுமையான குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் மாலை நேரங்களில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu