காட்டெருமை சுட்டுக்கொலை: 4 பேரிடம் வனத்துறையினர் விசாரணை

காட்டெருமை சுட்டுக்கொலை: 4 பேரிடம் வனத்துறையினர் விசாரணை
X

குன்னூர் அருகே சுட்டுக் கொள்ளப்பட்ட காட்டெருமை - கோப்புப்படம்

காட்டெருமையை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நாட்டு துப்பாக்கி இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டம். இங்குள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன.

குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பாலாடா செல்லும் சாலையில் நான்கு வயது மதிக்கதக்க ஆண் காட்டெருமை ஒன்று தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக குந்தா வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,

இதனைத் தொடர்ந்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் மற்றும் வனத்துறையினர் கொலக்கம்பை காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்டனர்.

மேலும் காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர் பாலமுருகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது காட்டெருமையின் தலையில் இருந்து நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டா மற்றும் கடினமான ரப்பர் பொருள் அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இறந்த காட்டெருமையின் உடல் உறுப்புகளை ஆய்வுக்காக தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்க்கு அனுப்பி ஆய்வுக்கு பின் விபரம் தெரிவிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் காட்டெருமை மரணம் குறித்து குந்தா வனத்துறையினர் யாரேனும் இறைச்சிக்காக காட்டெருமையை வேட்டையாடினார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்த காட்டெருமையை உடல் கூராய்வு செய்த போது தலையில் இரும்பு மற்றும் ரப்பர் துண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டு சேகரிக்கப்பட்டன. காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தனிப்படையினர் காட்டெருமை இறந்து கிடந்த பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள், காட்டேரி அணைக்கு மேல் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் காட்டெருமையை துப்பாக்கியால் சுடும் நபர் பதிவாகி இருக்கிறாரா என்பது ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதனை அடுத்து சந்தேகத்தின் பெயரில் கெந்தலா மற்றும் கொல்லிமலை பகுதியை சேர்ந்த நான்கு நபர்களிடம் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் காட்டெருமையை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நாட்டு துப்பாக்கி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture