ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: இன்ப அதிர்ச்சி அளித்த எஸ்டேட் உரிமையாளர்
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக விலையுயர்ந்த பைக்குகளை வழங்கிய எஸ்டேட் உரிமையாளர்
தீபாவளி பண்டிகைக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் தொகையை போனசாக வழங்குவது வழக்கம். சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தங்க ஆபரணங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களையும் வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த தேயிலை எஸ்டேட் உரிமையாளர் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக புல்லட் பைக்கை வழங்கி அசத்தியுள்ளார்.
கீழ் கோத்தகிரியை சேர்ந்தவர் சிவக்குமார் என்பவர் சிவகாமி தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி விவசாயம், காளான் உற்பத்தி என பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இவரது இந்த நிறுவனங்களில், 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை சமயங்களில் தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை கொடுத்து அசத்துவது அவரது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தனது எஸ்டேட்டில் 5 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்கள் 15 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
உரிமையாளர் சிவக்குமார், தனது ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களை குறிப்பிட்டனர்.
அதை அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு ஹிமாலயன், தலா ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள 4 ராயல் என்பீல்டு கிளாஸிக், தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 ராயல் என்பீல்டு ஹன்ட்டர், தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில் யமகா ரே ஸ்கூட்டர் என 15 வாகனங்களை முன்பதிவு செய்து, தனது நிறுவனத்திற்கு வரவழைத்தார்.
பின்னர் 15 ஊழியர்களையும் அழைத்து, தங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்களித்த உங்களுக்கு எனது தீபாவளி பரிசு என கூறி ஒவ்வொருவரிடமும் சாவியை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்தார். இதுதவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்க உள்ளார்.
இதுகுறித்து எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் கூறுகையில், இந்த எஸ்டேட் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு ஊழியர்களின் கடின உழைப்பும் பங்கும் உள்ளது.
ஊழியர்களை கௌரவித்து ஊக்கமளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் மகிழும் வகையில் போனஸ் வழங்குகிறேன். இந்த ஆண்டு 15 ஊழியர்களை தேர்வு செய்து புல்லட் வழங்கியுள்ளேன். வரும் ஆண்டுகளிலும் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் பரிசுகளை வழங்குவேன் என்று கூறினார்.
எஸ்டேட் உரிமையாளர் தனது ஊழியர்கள் 15 பேருக்கு புல்லட் மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu