நீலகிரியில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் சக்கரத்தில் திடீர் தீ
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச்சேர்ந்த தனியார் கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமான லாரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அதனை நிரப்புவதற்காக கோவை கிணத்துக்கிடவு பகுதியில் உள்ள பெரிய களந்தைக்கு சென்றது.
லாரி பர்லியாறு சோதனை சாவடியை தாண்டி 10 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென லாரியின் வலப்புற பின்பக்க டயர் வெடித்துள்ளது.மேலும், அழுத்தம் காரணமாக டயரில் தீப்பற்றியுள்ளது. இதனையடுத்து லாரியை அதே இடத்தில் நிறுத்திய ஓட்டுநர் தீயணைக்கும் கருவியின் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டுள்ளார். எனினும் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
இதனையடுத்து அவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் இணைந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
லாரி முழுவதும் காலி சிலிண்டர்கள் மட்டுமே இருந்ததால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. நல்வாய்ப்பாக ஓட்டுநர் தீ விபத்து ஏற்பட்டதும் லாரியை விட்டு கீழே இறங்கியதால் அவரும் உயிர் தப்பினார். மேலும்,டயரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக டீசல் டேங்க் உருகி டீசல் ஆறாக சாலையில் ஓடியது.
இதனையடுத்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் பவானி ஆற்று பாலத்தின் அருகிலேயே போக்குவரத்தை நிறுத்தினர். பகல் நேரத்தில் நடந்த இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உரிய நேரத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu