மீண்டும் தனது வசிப்பிடத்திற்கே திரும்பிய காட்டுயானை

மீண்டும் தனது வசிப்பிடத்திற்கே திரும்பிய காட்டுயானை
X

இருப்பிடத்திற்கு திரும்பிய காட்டுயானை ரிவால்டோ.

மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியில் மரக்கூண்டிலிருந்து வேறு பகுதியில் விடப்பட்ட காட்டு யானை மீண்டும் அதே பகுதிக்கு வந்தது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் தும்பிக்கையில் காயம்பட்ட காட்டு யானை ரிவால்டோ மரக்கூண்டில் அடைக்கப்பட்டு நேற்றைய முன்தினம் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிக்கல்லா வனப்பகுதியில் விடப்பட்டது. இதையடுத்து வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை மீண்டும் தான் உலாவி வந்த பகுதியை நோக்கி வந்தடைந்தது.

இந்நிலையில் வனத்துறையினர் தனிக்குழு அமைத்து யானையை கண்காணித்து வரும் நிலையில், சிகிச்சையின் காரணமாக முன்பு தும்பிக்கையால் உணவு உண்ண முடியாத நிலையில் இருந்த யானை தற்போது தனக்கு தேவையான உணவுகளை உண்கிறது. மீண்டும் ஊருக்குள் யானை வந்தால் யானைக்கு பொதுமக்கள் இடையூறு செய்யாமலும் உணவளிக்காமல் இருக்க வேண்டும் என வனத்துறையினர் கூறினர்.மேலும் யானை வனப்பகுதியில் தானாக உணவு உட்கொள்வதால் அதை வனத்திலேயே விட முடிவு செய்துள்ளனர்.

மேலும் வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல இனித் தேவையில்லை எனவும் தற்போது நடமாடும் வனப்பகுதிகளிலேயே யானை இருக்கும் ரேடியோ காலர் மூலம் நாள்தோறும் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கப்படவுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் உலா வரும் காட்டு யானை ரிவால்டோ மக்களுடன் பழகி வந்தது. மரக்கூண்டில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் மீண்டும் அதன் வாழ்விடத்தை தேடி வந்துள்ளது. வனத்துறை மருத்துவக் குழுவை கொண்டு அதை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

85 நாட்களுக்கும் மேலாக மரக்கூண்டிலிருந்து வனத்தில் விடப்பட்ட காட்டு யானை ரிவால்டோ தனது வாழ்விடத்தை தேடி வந்துள்ளது அனைவரிடத்திலும் வியப்படைய செய்துள்ளது.


Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!