மாணவர்களுக்கான பணம் 'சுருட்டல்': 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

மாணவர்களுக்கான பணம் சுருட்டல்:    2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
X
மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த புகாரில், இரண்டு தலைமையாசிரியர்களை நீலகிரி ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்ய செய்து உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில், வனப்பகுதி அதிகமாக உள்ளதால் அதிகளவிலான பழங்குடின மக்கள் வனப்பகுதியை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க பல்வேறு வசதிகளுடன் நீலகிரி மாவட்டம் முழுவதும் 22 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிகளில் உள்ள விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கூடலூர் சுற்றுவட்டாரப்பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளில், தேவலா பகுதியில் இயங்கி வரும் அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 67 பழங்குடி இன மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதேபோன்று பொன்னானி பகுதியில் 80க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 70 சதவீத மாணவ மாணவிகள் பள்ளியில் உள்ள விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.

தேவாலா பள்ளியின் தலைமையாசிரியராக பாக்கியசேனன் என்பவரும், பொன்னானி பள்ளியில் தலைமையாசிரியராக சேகர் என்பவர் பணியாற்றி வந்தனர். கடந்த கொரோனா காலகட்டத்தில் பழங்குடியின மாணவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாணவனுக்கும் தமிழக அரசு சார்பாக 6300 ரூபாய் பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி பள்ளியின் தலைமையாசிரியருக்கு அந்த பணமும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு , பெற்றோர்கள் சிலர், அரசால் வழங்கப்பட்ட பணம் தங்களுக்கு கிடைக்கவில்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தனர்.

புகார் மீது கடந்த ஒரு வாரம் முன்பு அதிகாரிகள் பள்ளி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல மாணவர்களின் பணத்தை இரண்டு தலைமை ஆசிரியர்கள் கையாடல் செய்தது உறுதியானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இரண்டு தலைமையாசிரியர் களையும் பணியிடை நீக்கம் செய்ய செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை கையாடல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கையாடல் செய்த பணம் மேலும் அதிகமாகும் என தெரிய வந்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்