முதுமலை சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டம்

முதுமலை சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டம்
X

முதுமலை சாலையில் உலா வரும் காட்டு யானை கூட்டம்.

யானைகள் சாலையோரங்களில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எவ்வித இடையூறும் செய்யாமல் வாகனங்களை இயக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக பெய்து வரும் மழையால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் கேரளா, கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானை உட்பட வன விலங்குகள் உணவு தேடி இடம்பெயர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி-கூடலூர் சாலையில் இரு குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் குட்டிகளுடன் சாலைக்கு வந்தது. அவ்வாறு சாலைக்கு வந்த யானை கூட்டம் வாகனங்கள் வருவதை பொருட்படுத்தாமல் சாலையில் கூட்டமாக ஒய்யாரமாக நடந்து சென்றது.

இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பின்னோக்கி இயக்கிச் சென்றனர். சிறிது தூரம் சாலையில் சென்ற யானை கூட்டம் பின்பு வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றது. இருப்பினும் பெண் ஒற்றை யானை ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தபோது, அப்போது இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் எதிர்பாராதவிதமாக யானையின் அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அந்த யானை அந்த இருசக்கர வாகன ஓட்டிகளை எவ்வித இடையூறும் செய்யாமல் வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது கூட்டம் கூட்டமாக யானைகள் சாலையோரங்களில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் யானைகளுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் வாகனங்களை இயக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!