நீலகிரி: சுகாதாரப்பணியாளர்களுக்கு கொலைமிரட்டல் - சிகிச்சைக்கு வர மறுத்து கொரோனா நோயாளி அட்டகாசம்!

நீலகிரி: சுகாதாரப்பணியாளர்களுக்கு கொலைமிரட்டல் - சிகிச்சைக்கு வர மறுத்து கொரோனா நோயாளி அட்டகாசம்!
X

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி பகுதியில், கொரோனா நோயாளிகள் சிலர், சுகாதாரத்துறையினருடன் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டலும் விடுத்தனர். 

பந்தலூர் பகுதியில் கொரோனா நோயாளிகளை அழைக்க சென்ற சுகாதார அதிகாரிகளுடன் வாக்குவாதம், கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி, மேஸ்திரிகுன்னு பகுதியில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களை, ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்ல, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றனர்.

அப்போது, வீட்டில் இருந்து ஆம்புலன்சில் ஏற மறுத்து சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி பணியாளர்களுடன், அந்த நோயாளிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, நோய்த்தொற்று பாதித்தவர்கள், ஆம்புலன்ஸில் வர மறுப்பு தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த நோயாளிகளை சமாதானப்படுத்தி , பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பேரின் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் மீது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறியது மற்றும் சுற்றித் திரிந்தது உள்ளிட்ட பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, நகராட்சி தரப்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!