இரண்டு பேரை கொன்ற யானையை கண்காணிக்கும் பணி தீவிரம்
வனப்பகுதியில் கண்கானிப்பு பணிகள் இன்று துவங்கியது, கிராமப் பகுதிகளில் புகுந்து தொல்லை தரும் யானைகளை அடர்வனப் பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை .
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த சேரம்பாடி பகுதியில் தந்தை மகன் இருவர் உள்ளிட்ட மூன்று பேரை அடுத்தடுத்து கொன்ற காட்டு யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க எடுத்த நடவடிக்கைகள், யானை கேரளா வனப்பகுதிக்குள் சென்றதால் தொய்வடைந்து உள்ளது. எனினும் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் பகுதியில் இருந்து பறக்கும் படை சிறப்புக் குழுவினர் கூடலூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஒரு வனச்சரகர் தலைமையில் 9 பேர் கொண்ட இந்த குழுவினர் தற்போது சேரம்பாடி, கோட்டைமலை, எலியாஸ்கடை, காப்பி காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் கூடலூர் வனக் கோட்டத்தில் உள்ள வனச்சரகர்கள் மற்றும் வன குழுவினரும் இணைந்து இப்பணிகளில் இன்று முதல் ஈடுபடத் துவங்கி உள்ளனர். கேரளா பகுதியில் யானைகளின் நடமாட்டம் குறித்து கேரள வனத்துறையினருடன் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமிட்டு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பொது மக்கள் உறுதியாக உள்ளனர்.
யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அது தமிழக கேரள வனப்பகுதிகள் என வராமல் இரு மாநில வனத்துறையினர் ஒத்துழைப்புடன் யானையைப் பிடிக்க வசதியான இடத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடித்து அதனை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை..
இதேபோல் பந்தலூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு வனப்பகுதிகளில் தங்கியுள்ள காட்டு யானை கூட்டங்கள் மாலை இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளுக்குள் வருவதை தடை செய்யும் வகையில் அனைத்து யானைகளையும் அடர் வனப்பகுதிக்குள் விரட்டி அவை மீண்டும் கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் வராத வகையில் எல்லைகளில் மின் வேலி அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu