இன்றுவரை வரவேற்பை பெறும் கிராமியக் கலை "காமன் கூத்து"
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆமை குளம் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் பாரம்பரியமாக நடத்தும் காமன் பண்டிகை விழா இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்றது. இதில் கூடலூர் பந்தலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தாயகம் திரும்பிய தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களும் பெருமளவில் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டனர்.
ரதி மன்மதன் திருமணம், சிவனின் தவம், கரும்புவில் கொண்டு தவத்தைக் கலைத்த மன்மதனை நெற்றிக்கண் கொண்டு எரிக்கும் சிவன், சிவனிடம் மன்மதனின் உயிரை மீண்டும் திருப்பி தரக்கோரி மன்றாடும் ரதி இவற்றைக் கதைப் பாடலாக கொண்டு இரவு முழுவதும் கதைப்பாடலுடனும் தாளத்துடனும் கூத்து நடைபெற்றது.
கூத்தினைக் காணுவதற்கு வரும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான மக்கள் விடிய விடியக் காத்திருந்து கூத்தை கண்டு ரசித்தனர். மன்மதனை எரிக்கும் சொக்கட்டான் எனும் நிகழ்ச்சியில் எரியும் நெருப்பில் தங்கள் நேர்த்திக் கடனுக்காக கொண்டு வந்திருக்கும் உப்பை மக்கள் தூவுகின்றனர். கூத்தில் கலந்துகொண்டு எரியும் நெருப்பில் உப்பை தூவி வைக்கும் வேண்டுதல் நிறைவேறுகிறது என்பது அவர்களின் நம்பிக்கை.
மாசி மாத அமாவாசை முடிந்து மூன்று அல்லது ஐந்தாம் நாள் கூத்து நடக்கும். 15 நாள் விரதம் இருந்து இந்த கூத்தினை நடத்துகின்றனர். கலைஞர்களின் தளராத தொடர் முயற்சியால், கூடலுர் ஆமைக்குளம் பகுதியில் 31வது ஆண்டாக இந்த கூத்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கூத்து நிகழ்ச்சியில் பாரம்பரியமாக 40 வருடங்களுக்கும் மேலாக காமன் கூத்து கதையைப் பாடலாகப் பாடி வரும் நாமக்கல்லைச் சேர்ந்த கலைஞர் ராமச்சந்திரன் கூறுகையில்,
பாரம்பரியமிக்க இந்த தமிழ் கலையை தொடர்ந்து அடுத்த தலைமுறையியும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கலைகள் அழியாமல் பாதுகாக்க அரசு கலைஞர்களுக்கு உதவ வேண்டும். தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான காமன் கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகளை 200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலைக்காக இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள் இக் கலையினை அழியாமல் பாதுகாத்து வந்துள்ளனர். மீண்டும் சொந்த நாடு திரும்பியும் இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் அழியாமல் கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu