கோடநாடு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட தீபுவிடம் தனிப்படை போலீஸ் விசாரணை

கோடநாடு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட தீபுவிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
X
கோடநாடு வழக்கில், மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.

கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

இதனிடையே கோடநாடு வழக்கில் நீலகிரி காவல் துறையினர் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 150 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோடநாடு வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். இதன் அடிப்படையில் கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், தீபு விசாரணைக்கு ஆஜரானர். தீபுவிடம் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் மற்றும் இவ்வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக தெரிகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி