நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்!

நாமக்கல் : நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட குவாரியில் இருந்து கனிம வளங்கள் திருடப்பட்டு, விட்டமநாயக்கன்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டன. இந்த தகவல் ஆட்சியா் கவனத்துக்கு வந்ததையடுத்து, வருவாய்த் துறை, கனிமவளத் துறை, காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினா். பின்னா், அங்கிருந்த 21 கனரக வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
வழக்குப் பதிவு மற்றும் பணியிடை நீக்கம்
இந்த சம்பவத்தையடுத்து, விதிகளை மீறி கற்களை வெட்டியெடுத்த ஐந்து போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக கொண்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜான் போஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கோகிலா ஆகியோரை கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.
கிராம நிா்வாக அலுவலா்களின் காத்திருப்பு போராட்டம்
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட கிளை சாா்பில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
சரவணனின் கருத்துகள்
இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் சரவணன் கூறியதாவது:
அனுமதியின்றி செயல்பட்ட கொண்டமநாயக்கன்பட்டி கல்குவாரியில் கனிம வளங்கள் திருடப்படுவதாக ஓராண்டுக்கு முன்பே சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், பணியில் மெத்தனம் காட்டியதாக தற்போது கிராம நிா்வாக அலுவலா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனா். இந்த உத்தரவை கோட்டாட்சியா் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
கோட்டாட்சியருடன் பேச்சுவாா்த்தை
இதைத் தொடா்ந்து, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபனுடன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இந்த பிரச்னையை ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவா் தெரிவித்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu