திருச்செங்கோட்டில் 13 வாடகை லாரிகளை விற்ற 4 பேர் கைது - 11 லாரிகள் மீட்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில், திருப்பூர் மாவட்டம் சுந்தரம்பள்ளியை சேர்ந்த முருகேசன் மகன் மோகன்ராஜ் (31) என்பவர் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், திருச்செங்கோடு, தொண்டிகரடு, வீடில்லாதோர் சங்க காலனியை சேர்ந்த ஷேக் சிக்கந்தர் என்பவர், கடந்த 01.03.2021-ஆம் தேதி முதல், 2 லாரிகளை வாடகைக்கு பெற்று தொழில் செய்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக சரிவர வாடகையை தராததால் லாரியை ஒப்படைக்கும்படி கேட்டபோது தரமறுத்ததால், மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில், திருச்செங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருச்செங்கோடு நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாஸ்கரபாபு மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர்கள் தலைமையிலான தனிப்படையினர், இதுதொடர்பாக ஷேக் சிக்கந்தரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் மோகன்ராஜை போல் மேலும் 5 நபர்களிடம் லாரிகளை வாடகைக்கு பெற்று மோசடி செய்து 13 லாரிகளை விற்றது தெரியவந்தது. விற்பனை செய்ய உடந்தையாக இருந்த ஈரோடு வைரம்பாளையம் தங்கராஜ் மகன் ரவி (43), ஈரோடு ஸ்டேட் பேங்க் நகர், இராமகிருஷ்ண பிள்ளையின் மகன் கண்ணன் என்ற பாலகிருஷ்ணன் (55), மற்றும் திருச்செங்கோடு கொல்லப்பட்டியை சேர்ந்த வீரமணி மகன்நந்தகுமார் (23), ஆகியோர்களை கைது செய்து, மோசடி செய்து விற்ற 11 லாரிகளை மீட்கப்பட்டனர். மேலும் விற்ற பணத்தில் ஷேக் சிக்கந்தர் புதிதாக வாங்கிய 1 லாரி, 2 கார்கள் மற்றும் ரொக்கம் ரூபாய் மூன்று இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu