டாஸ்மாக் கடை திறப்பதால் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை தேவை : ஈஸ்வரன் எம்எல்ஏ வேண்டுகோள்

ஈஸ்வரன் எம்.எல்.ஏ.
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பதால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈஸ்வரன் எம்எல்ஏ கூறியுள்ளார். இது குறித்து கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருக்கும் நேரத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற, முதல்வர் ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இன்னும் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 27 மாவட்டங்களில் மேலும், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள மற்ற மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இதனால் கொரோனா தொற்று குறைந்திருக்கும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பினால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உருவாகலாம். அதேபோல டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து திறக்கப்படாத மாவட்டங்களில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். தமிழக அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எங்கு சென்றாலும் உணர முடிகிறது. டாஸ்மாக் கடைகள் திறப்பு விஷயத்தில் உள்ள பிரச்சினைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன்மூலம் இன்னும் சில வாரங்களில் கொரோனா தொற்றில்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu