நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன் வருத்தம்
இ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ.,
நூல் விலை உயர்வால், நலிவடைந்து வரும் தமிழக ஜவுளித்தொழில் துறையை, பாஜக கண்டுகொள்ளவில்லை என கொமதேக ஈஸ்வரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வரலாறு காணாத அளவில் நூல் விலை ஏற்றத்தினால், தமிழகத்தில் ஜவுளித்துறை நலிவடைந்து வருகிறது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட ஜவுளி துறையினர் மேலும் 15 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். தமிழக முதலமைச்சர் கடந்த 5 மாதங்களாக மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். நானே நேரடியாக டெல்லி சென்று மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் நூல் விலை ஏற்றம் சம்பந்தமாக பேசியும் வந்திருக்கின்றேன்.
தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதித்துள்ளேன். முதலமைச்சர் டெல்லி சென்றபோது நேரடியாக அமைச்சர்களிடத்தில் நூல் விலை ஏற்றத்தை பற்றி பேசி வலியுறுத்தினார். 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்டி, கனிமொழி எம்.பி தலைமையில், கொங்குமண்டல எம்.பிக்குள் மத்திய நிதியமைச்சர் மற்றும்ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து பிரச்சினையை விளக்கி கூறியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று தமிழக முதல்வர், மத்திய ஜவுளித்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இப்பிரச்சினை குறித்து பேசியுள்ளார். இவ்வளவு முறையிட்ட பிறகும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் மவுனம் காப்பது வேதனையாக உள்ளது. தினசரி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகின்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நூல் நிலை உயர்வு விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. தமிழக பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் நூல் விலை ஏற்றம் தமிழகத்தில் முக்கியமான பிரச்சனையாக தமிழக பாஜகவுக்கு தெரியவில்லை.
இந்த விஷயத்தில் நூல் விலை ஏற்றத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டிருக்கின்ற தமிழக முதல்வரை தமிழக ஜவுளி துறையின் சார்பாக பாராட்டுகின்றோம். முதலமைச்சருடைய நடவடிக்கைகள் மூலம் நூல் விலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ஜவுளித்துறையை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu