திருச்செங்கோடு அரசுப்பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை

திருச்செங்கோடு அரசுப்பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை
X
திருச்செங்கோடு அரசுப்பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிள் உள்ள சீத்தாராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45), தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சந்தனமாரி (35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களது மகள் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

சம்பவத்தன்று, மதியம் 2.30 மணியளவில், வாந்தி வருவதாக கூறி அந்த மாணவி வகுப்பறையை விட்டு வெளியே சென்றார். வெளியே சென்ற அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். அப்போது. மாற்றுத் திறனாளிகள் செல்ல அமைக்கப்பட்டிருந்த சாய்தளத்தின் கைப்பிடி மீது மாணவி விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும், திருச்செங்கோடு டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்த நிலையில் பள்ளியில் வேலை பார்க்கும் தமிழாசிரியை அருள்செல்வி என்பவர், மாணவி செய்யாத தவறுக்காக கண்டித்ததாலும், கிளாஸ் லீடர் பொறுப்பில் இருந்து நீக்கியதாலும் மனமுடைந்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலை குறித்து எழுதி வைத்திருந்த கடிதத்தை ஆசிரியர்கள் கிழித்தெறிந்து விட்டதாகவும், ஆசிரியை அருள் செல்வியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், திருச்செங்கோடு சங்ககிரி மெயின் ரோட்டில், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் ரோட்டில் அமர்ந்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும், மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் டாக்கூர், அதிரடிப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவர் சாலைமறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்தால், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறினார்.

கூட்டத்தினர் கலையாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அதிரடிப்படை போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திரண்டு நின்ற கூட்டத்தினர் திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.

இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் வேறு ஒரு மாணவியின் தாயார் பானுப்பிரியா என்பவர், இறந்து போன மாணவியைப் போலவே, அதே பள்ளியில் படிக்கும், தங்களுடைய மாணவிகளும், பள்ளியில் கழிவறை மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் ஆசிரியர்களின் கழிவறையை பயன்படுத்தியதற்காக மாணவிகளை திட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!