திருச்செங்கோடு அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை ஆர்.ஐ கைது

திருச்செங்கோடு அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை ஆர்.ஐ கைது
X

பைல் படம்.

திருச்செங்கோடு அருகே நில அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை ஆர்.ஐ லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சூவிழிராஜா. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் எலச்சிபாளையத்தில் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு (சர்வே) செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் (48) விண்ணப்பம் அளித்தார். விண்ணப்பித்து ஒருமாதம் ஆகியும், அளவீடு செய்து கொடுக்காமல் பரமேஸ்வரன் காலம் தாழ்த்தி வந்தார். மேலும், ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதாக அவர் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சூவிழிராஜாவிடம் வழங்கினர். அவர் போலீசார் கூறியப்படி திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த ஆர்.ஐ பரமேஸ்வரனிடம் அந்த பணத்தை வழங்கினார். அதனை அவர் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ஆர்.ஐ பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!