கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல்: எம்எல்ஏ., ஈஸ்வரன் கோரிக்கை
இ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ.
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு, பயிர்க் கடன் மற்றும் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறை அமைச்சரும் இந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவாக பேசியிருந்தார். கூட்டுறவு சங்கங்களில் நகையை அடமானத்திற்கு வாங்காமலேயே கடன் கொடுத்திருப்பதும், கடன் தள்ளுபடிக்காகவே கடன் பெற்றிருப்பதும், போலி நகைகளுக்கு கடன் கொடுத்திருப்பதும், ஒரே நபர் பல கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியிருப்பதும் என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி எனக்கு புகார் வந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டசபையில் பேசினேன். அந்த புகார்கள் எல்லாம் உண்மைதான் என்கிற நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு முறைகேடுகள் வெளிவந்துள்ளன.
முழுமையாக நேர்மையான முறையில் கடன் வாங்கிய அடித்தட்டு மக்களுக்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இன்னும் அனைத்து இடங்களிலும் ஆய்வுகளை துரிதப்படுத்தி உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும். எதிர்காலத்தில் யாரும் இப்படி முறைகேட்டில் ஈடுபடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதிலும், தள்ளுபடி செய்ததிலும் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பதை மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த முறைகேடுகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.
தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அப்படி முறைகேடாக நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகத்தில் இருந்தால் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடக்கதான் செய்யும். முறைகேடுகளை தடுக்க, தற்போதுள்ள கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைத்துவிட்டு, ஜனநாயக முறைப்படி மீண்டும் தேர்தல் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu