நாமக்கல்: உரிமம் இல்லாமல் தீபாவளி ஸ்வீட், காரம் தயாரித்தால் நடவடிக்கை

நாமக்கல்: உரிமம் இல்லாமல் தீபாவளி ஸ்வீட், காரம்  தயாரித்தால் நடவடிக்கை
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்.

Sweet Diwali Food -நாமக்கல் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் தீபாவளி ஸ்வீட், காரம் தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Sweet Diwali Food -தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட், கார வகைகள் தயார் செய்பவர்கள் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி லைசென்ஸ் பெற வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, லைசென்ஸ் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று தயாரித்தல் மற்றும் விற்பனை செய்ய வேண்டும்.

தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி, அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்க கூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது. பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது, பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கும், விவரச்சீட்டு இடும் போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்புதுறையின் லைசென்ஸ் எண், பேட்ச் எண், லாட் எண் சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விபரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிதொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்து, நகங்களை வெட்டி சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருட்களை பார்சல் செய்து தரக்கூடாது மற்றும் செய்திதாள்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது.

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை சார்பாக இதுவரை 238 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் குறித்த புகார்கள் ஏதாவது இருந்தால் அதனை 94440-42322 என்ற எண்ணிற்கு போன் செய்து தெரிவிக்கலாம் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai platform for business