ஜவுளித்தொழிலை காப்பாற்றுங்க: பாஜக அண்ணாமலைக்கு ஈஸ்வரன் கோரிக்கை
இது குறித்து கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளி துறையை சார்ந்த அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக இதே சூழ்நிலை நீடிக்கிறது. இந்த நிலையிலும் மத்திய அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை. உடனடியாக பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதித்தால் மட்டுமே ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும்.
பாதிப்பின் தீவிரத்தை உணராமல் மத்திய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெரிய வியாபாரிகளால், பஞ்சு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதால் பயன்பாட்டுக்கு வராமல், செயற்கையாக நூல் விலை உயர்ந்து கொண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணம்.
இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்திக் கொண்டு ஈரோடு மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதங்களை எழுதிக் கொண்டுள்ளார். தொழில் துறையை சார்ந்தவர்கள் மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக ஜவுளித் துறையின் உண்மைநிலையை மத்திய அரசுக்கு எடுத்துக்கூற வேண்டும். இது ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பது ஏற்புடையதல்ல. உடனடியாக பாஜக தலைவர், இது குறித்து முயற்சி எடுத்து, நூல் விலையை குறைந்து ஜவுளித் தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu