திருச்செங்கோடு: பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா.
திருச்செங்கோடு நகராட்சியில், அண்ணா பூங்கா நகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர் குமரன் கல்வி நிலையம், நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, சட்டையம்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, சாணார்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநருமான, இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவின்போது கண்காணிப்பு பணிகளுக்காக நுண்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகள் கேமராக்கள் மூலம் இண்டர்நெட் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறைகள், சாய்வுதள வசதிகள் உள்ளிட்டவைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என, அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறையினை, தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். ஆய்வின் போது, திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் கணேசன், மண்டல பார்வையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu