திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் உறுதி
திருச்செங்கோட்டில் நடைபெற்ற கண்ணகி விழாவில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். அருகில் எம்.பி சின்ராஜ், எம்எல்ஏ ஈஸ்வரன்ஆகியோர்.
திருச்செங்கோடு, அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, 65-ஆவது ஆண்டு கண்ணகி விழா, திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி சின்ராஜ் முன்னிலை வகித்தார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த 65 ஆண்டுகளாக, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழாவின்போது நடத்தப்பட்டுவரும் கண்ணகி விழாவில், பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் டி.எம். காளியண்ணன், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் போன்ற பல பெரியவர்கள் கலந்துகொண்டு பேசியுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நினைவு அரங்கங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர்களின் சிலைகள் அமைக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகளை 5 நாட்களுக்குள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சுதந்திர போராட்டம், மொழிப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களின் தகவல்கள், புகைப்படங்கள், வாழ்க்கை குறிப்புகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சியும் அமைக்கப்பட்டு, கடந்த கால வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பணிகளை தமிழக முதல்வர் செய்து வருகிறார்.
திருச்செங்கோடு பகுதி பொதுமக்களின் கோரிக்கையின்படி, வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட திருச்செங்கோடு பகுதியில் கண்ணகிக்கு கோட்டம் அமைக்க, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுவிரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். விழாவில் பரதநாட்டியம், சிவன் திருக்கயிலாய நடனம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி அவர்கள், திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு, துணை சேர்மன் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu