திருச்செங்கோடு அருகே லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் கைது
திருச்செங்கோடு அருகே 3,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக நகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது வீட்டிற்கு வரி அதிகமாக உள்ளது என்றும் அதை குறைத்து தரவேண்டும் என்றும் வரி வசூல் செய்யும் பணியாளர் ஆனந்தகுமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு வரியை குறைப்பதற்கு 7000 ரூபாய் லஞ்சமாக கேட்டு பின்பு 5000 ரூபாய் பேசப்பட்டு முதல் தவணையாக 3500 ரூபாய் தருவதாக சண்முகம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகத்திடம் கொடுத்தனுப்பினார்கள். அந்த பணத்தை திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் வைத்து ஆனந்தகுமார் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து ஆனந்தகுமாரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நகராட்சி வருவாய் அலுவலர் கோபியிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu