சித்தோடு அருகே சொகுசு பேருந்தில் ½ கிலோ தங்கம், 18 ஆயிரம் அமெரிக்க டாலர் பறிமுதல்: தொழில் அதிபர் கைது

சித்தோடு அருகே சொகுசு பேருந்தில் ½ கிலோ தங்கம், 18 ஆயிரம் அமெரிக்க டாலர் பறிமுதல்: தொழில் அதிபர் கைது
X
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சொகுசு பேருந்தில் ½ கிலோ தங்கம், 18 ஆயிரம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை திருடி வந்த தொழில் அதிபரை கைது செய்தனர்.

சித்தோடு அருகே சொகுசு பேருந்தில் ½ கிலோ தங்கம், 18 ஆயிரம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை திருடி வந்த தொழில் அதிபரை கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு பேருந்தில் தங்கம் கடத்தி வருவதாக ஈரோடு மாவட்டம் பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு ரத்தினகுமாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, அவர் பேருந்தில் சோதனை நடத்த பவானி மற்றும் சித்தோடு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பவானி அருகே லட்சுமி நகர் பகுதி வழியாக சென்ற அனைத்து பேருந்துகளையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஐதராபாத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு தனியார் சொகுசு பேருந்து வந்தது. அந்த, பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது ஒருவர் 2 பைகள் வைத்திருந்ததை பார்த்தனர். தொடர்ந்து அந்த பைகளை வாங்கி போலீசார் சோதனை செய்தனர்.

பைகளில் 100 கிராம் தங்க கட்டிகள்-5 என ½ கிலோ தங்கமும், 18 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம்), 4 செல்போன்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த புகழ்வாசன் (வயது 43) என்பதும், தொழில் அதிபரான இவர் திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனத்தை நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும், அவர் ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு கிலோ தங்கத்தையும், அமெரிக்க டாலரையும் திருடி வந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து தங்க கட்டிகள், அமெரிக்க டாலர், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் புகழ்வாசனை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திருப்பூரில் புகழ்வாசன் நடத்தி வந்த ஆயத்த ஆடை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் கடன் வாங்கி உள்ளார். இதனால் நஷ்டத்தை போக்கவும், கடனை அடைக்கவும், நண்பர் ஒருவர் உதவியுடன் ஐதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர ராவ் என்பவரிடம் மேலும் கடன் கேட்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அமெரிக்க டாலரையும், தங்கத்தையும் புகழ்வாசன் திருடி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, அவர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் புகழ்வாசனை சித்தோடு போலீசார் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஐதராபாத் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story
scope of ai in future