நாமக்கலில் கோடை மழை

நாமக்கலில் கோடை மழை
X
நாமக்கலில் திடீர் மழை காரணமாக, வெயிலின் தாக்கத்தை தணித்து மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது

கோடை மழை வரவால் மலர்ந்த விவசாயிகளின் முகங்கள்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று எதிர்பாராத விதமாக கோடை மழை பெய்து மக்களுக்கு குளிர்ச்சியையும், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ராசிபுரம் பகுதியில் நேற்று மதியம் ஆர்.புதுப்பாளையம், பட்டணம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டி, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, ஆர்.புதுப்பட்டி, தொப்பப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மங்களபுரம் உள்ளிட்ட சில இடங்களில் லேசான தூறல் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழைக்குப் பிறகு வெப்பம் குறைந்து மாலை முழுவதும் குளிர்காற்று வீசியது. ஆண்டுதோறும் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் விழா சமயத்தில் மழை பெய்வது வழக்கம் என்பதால், இந்தாண்டும் ஆஞ்சநேயர் கோவில் தீ மிதி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் நேற்று மழை பெய்ததால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெண்ணந்தூர் பகுதியிலும் கடந்த இரண்டு மாதங்களாக மழையின்றி வெயில் தாக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று வெண்ணந்தூர், ஓ.சவுதாபுரம், அலவாய்ப்பட்டி, அத்தனூர், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, தேங்கல்பாளையம், கட்டனாச்சம்பட்டி, கல்லாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.

நாமக்கல் நகரில் நேற்று காலை 9:00 மணிக்கு திடீரென கோடை மழை பெய்ததால், பரமத்தி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், குட்டை தெரு, கோட்டை சாலை, கொண்டிசெட்டிபட்டி, ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. காலை நேரத்தில் எதிர்பாராத மழை பெய்ததால் இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் நனைந்தபடியே சென்றனர். அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்களுக்கு நிம்மதி கிடைத்தது. குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து காற்றுடன் கூடிய குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த எதிர்பாராத கோடை மழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story