ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவத்தில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க கோரி மனு

நாமக்கல் : ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவர் கவின்ராஜ் உயிரிழந்த சம்பவத்தில், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் பெற்றோர், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
உயிரிழந்த மாணவர் கவின்ராஜின் தந்தை பிரகாஷ், தாய் வனிதா ஆகியோர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூன்றாவது மகனான கவின்ராஜ் (14), ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26-ஆம் தேதி பள்ளியில் கவின்ராஜ் மயங்கி விழுந்து விட்டதாக எனது கைப்பேசிக்கு, தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர் நடந்த சம்பவத்தை மறைக்க முயற்சி
நாங்கள் சென்ற போது மகனை பள்ளியில் இருந்து ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார். அங்கு சென்று கவின்ராஜை பார்த்தபோது, உடல் முழுவதும் ரத்தமும், பள்ளிச் சீருடை கிழிந்த நிலையிலும், பலத்த காயத்துடனும் காணப்பட்டான். தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, கழிவறையில் மயங்கி விழுந்து விட்டதாக நடந்த சம்பவத்தை மறைக்க முயற்சித்தனர்.
அங்குள்ள சக மாணவர்களிடம் விசாரித்தபோது, கவின்ராஜ் ஜாதிய அடிப்படையில் கொல்லப்பட்டது தெரியவந்தது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும்
ஜாதிய அடிப்படையில் மகனை கொலை செய்த மாணவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதுகாக்க தவறிய தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் மற்றும் உடந்தையாக இருந்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீட்டுத் தொகையாக ரூ. 10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் மகன் கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu