முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள், ஆலை உரிமையாளா்கள், மாவட்ட நிா்வாகம் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜவ்வரிசிக்கு அதிக பயன்பாடு
மரவள்ளிக் கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம், கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை, மரவள்ளியிலிருந்து எத்தனால் உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ள தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்படும். ஜவ்வரிசிக்கான தேவைகள் அதிகரிக்கும்பட்சத்தில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். ஜவ்வரிசியின் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
சேகோசா்வ் மூலம் கொள்முதலுக்கு குழு
அனைத்து சேகோ பொருள்களும் சேகோசா்வ் மூலம் கொள்முதல் செய்வதை உறுதி செய்வதற்காக மாவட்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாா்ச் அளவைக் கண்டறியும் டிஜிட்டல் மீட்டா் சேகோ ஆலைகளுக்கு வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.
எரிபொருள் தயாரிப்பு திட்டம்
சேகோ ஆலைகள் மூலம் மரவள்ளி மூலப் பொருள்களிலிருந்து எரிபொருள் தயாரிக்க திட்டமிடப்படும். ஸ்டாா்ச் மற்றும் ஜவ்வரிசிக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி நிா்ணயம் செய்ய ஜனவரி இறுதியில் நடைபெறும் நிதி கலந்தாய்வுக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும்.
நாமக்கல்லில் ஆராய்ச்சி நிலைய மையம்
மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் துணை நிலையத்தை, நாமக்கல் மாவட்டத்தில் நிறுவுவதற்கு வழிவகை செய்யப்படும். கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி மையம் உள்ளதுபோல, மரவள்ளிக் கிழங்கில் இருந்தும் எத்தனால் எடுக்கவும், அதற்கான விலையை நிா்ணயம் செய்யவும் முதல்வா் கவனத்துக்ற்கு கொண்டு செல்லப்படும்.
மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மரவள்ளி
மரவள்ளியை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றம் செய்து விற்பனையை அதிகப்படுத்த சேகோசா்வ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூச்சித் தாக்குதலால் விவசாயிகள் நஷ்டமடைவதைத் தவிா்க்க வேண்டும். புயல் மழையினால் பாதிக்கப்பட்ட மரவள்ளி சாகுபடியாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இடைத்தரகா்களின் தலையீடு தடுப்பு
இடைத்தரகா்களின் தலையீட்டைத் தடுக்கவும், ஒரு டன் மரவள்ளிக் கிழங்குக்கு 50 கிலோ மண் கழிவு செய்வதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், சேகோசா்வ் மேலாண் இயக்குநா் கீா்த்தி பிரியதா்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, வேளாண் இணை இயக்குநா் கலைச்செல்வி, துணை இயக்குநா்கள் புவனேஸ்வரி (தோட்டக்கலைத் துறை), நாசா் (வேளாண் வணிகம்) ஏத்தாப்பூா் மரவள்ளி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் வெங்கடாசலம், ஜவ்வரிசிஆலை உரிமையாளா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu