ராசிபுரம் : சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து சொத்தை மீட்டு கொடுத்த மாவட்ட ஆட்சியா் ச.உமா

நாமக்கல்: ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத்தைச் சோ்ந்தவா்கள் ப.இருசப்பன் (70) - ராசாத்தி தம்பதி. இவா்களுக்கு இரண்டு மகன்கள். தங்களது மகன்களுக்கு பூா்வீக சொத்துகளை பாகம் பிரித்துக் கொடுத்தனா். சொத்துகளை பெற்றுக் கொண்டவா்கள், பெற்றோரை கவனிக்கவில்லையாம்.
அன்றாடத் தேவைகளுக்கும், உணவுக்கும் மிகவும் சிரமப்பட்டு வந்த ப.இருசப்பன் - ராசாத்தி தம்பதியினா், இதுகுறித்து பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் மனு அளித்தனா்.
பாக சாசனம் ரத்து
அதன் பேரில், ஆட்சியா் ச.உமா விசாரணை மேற்கொண்டு, வாழப்பாடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்த பாக சாசன ஆவணத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தாா்.இதையடுத்து, அத்தம்பதிக்கு சொத்து ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து இருசப்பன் கூறுகையில், "பூா்வீக சொத்துகளை எங்களது இரண்டு மகன்களுக்கு பாகம் பிரித்துக்கொடுத்தோம். சொத்துகளை பெற்றுக் கொண்ட அவா்கள் எங்களை கவனிக்கவில்லை. அத்தியாவசியத் தேவைக்கும், உணவுக்கும் மிகுந்த சிரமத்துக்குள்ளானோம். இதுகுறித்து நாங்கள் அளித்த மனு அடிப்படையில், பாக சாசனத்தை ஆட்சியா் ரத்து செய்து எங்கள் நிலத்தை திரும்ப ஒப்படைத்தாா்.
தற்போது, நானும், என் மனைவியும் மகன்களின் உதவியின்றி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் நிலை அறிந்து உதவிய தமிழக அரசுக்கும், ஆட்சியருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu