கொல்லிமலை மகளிர் குழுவினருக்கு ரூ.1.63 கோடி கடன் உதவி வழங்கல்

கொல்லிமலை மகளிர் குழுவினருக்கு ரூ.1.63 கோடி கடன் உதவி வழங்கல்
X

கொல்லிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் குழுவினருக்கு நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், வங்கி கடன் உதவிகளை வழங்கினார். அருகில் சேந்தமங்கலம் எம்எல்ஏபொன்னுசாமி.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மகளிர் குழுக்களுக்கு ரூ.1.63 கோடி வங்கி கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பிடிஓ அலுவலகத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, வங்கி கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கி பேசியதாவது:

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 14 பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 488 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 5,577 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2021-2022 ஆம் நிதியாண்டில் இதுவரை 67 குழுக்களுக்கு ரூ.1.63 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இன்று 35 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1.65 கோடி கடனுதவிகளை சேர்த்து, மொத்தம் 102 குழுக்களுக்கு ரூ.3.28 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கின் மூலம் ஆண்டுக்கு, ரூ.12 செலுத்தி விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேரும் நபர்களுக்கு, ஏதேனும் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு வீபத்து காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுவினர் கொல்லிமலையில் தாங்கள் உற்பத்தி செய்த விளைப்பொருட்களை தனியாக சிறப்பு பெயரில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத 218 குடியிருப்புகள் முழுவதும் கொல்லிமலை பகுதியை சேர்ந்தவை என்பது சிறப்புக்குரியதாகும். பொதுமக்கள் அனைவரும், அரசின் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து, கொல்லிமலை மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், பைல்நாடு பஞ்சாயத்து, எடப்புகாட்டில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறைகளையும், மாணவ, மாணவிகளுக்கான கழிப்பிட வசதிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சிகளில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் உன்னி கிருஷ்ணன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநர் பிரியா, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!