கொல்லிமலை அருவிகளில் குளிக்க, செல்பி எடுக்க தடை: கலெக்டர் எச்சரிக்கை

கொல்லிமலை அருவிகளில் குளிக்க, செல்பி எடுக்க தடை: கலெக்டர் எச்சரிக்கை
X

கொல்லிமலையில் பெய்து வரும் தொடர்மழையால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

கனமழை எதிரொலியாக கொல்லிமலை அருவிகளில் குளிக்காவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், கொல்லிமலை அருவிகளில் குளிக்காவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம், புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும்.

மேலும், திருமணிமுத்தாறு மற்றும் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உரிய பாதுகாப்பின்றி, காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

கொல்லிமலையில் உள்ள பொது மக்கள், சுற்றுலா பயணிகள், அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது. மலைப் பகுதிகள் மற்றும் மலையடிவாரத்தில், திடீர் வெள்ளப்பெருக்கு எற்பட வாய்ப்பு உள்ளதால், வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்.

அபாயகரமான பகுதிகளில் நின்று, தொலைபேசியில் செல்பிகள் எடுக்கக்கூடாது. குழந்தைகள் காவிரி ஆற்றுப்படுகை, ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில், இறங்காத வகையில், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில், மண் சுவரால் கட்டப்பட்டுள்ள வீடுகளில் வசிப்போர், மழைக்காலங்களில் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் கவனமுடன் இருக்க வேண்டும்.

திருமணிமுத்தாறில் உள்ள தரைப்பாலங்களில் வெள்ளப் பெருக்கு அபாயமுள்ளதால், பாலங்களை கடக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசரகால உதவிக்கு, 1077 மற்றும் 04286 -281377 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai healthcare products