கொல்லிமலையில் மயானப்பாதையில் முள்வேலி அமைப்பு: மலைவாழ் மக்கள் பாதிப்பு

கொல்லிமலையில் மயானப்பாதையில் முள்வேலி அமைப்பு: மலைவாழ் மக்கள் பாதிப்பு
X

கொல்லிமலையில், மயானப்பாதையில் தனியார் அமைத்துள்ள முள்வேலியை அகற்றக்கோரி, மலைவாழ் மக்கள் அப்பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

கொல்லிமலையில் மயானத்துக்குச் செல்லும் பாதையை, தனியார் முள்வேலி அமைத்து தடுத்துள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுக்கா, திருப்புளிநாடு பஞ்சாயத்து, குப்பம்பாடி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காலியிடத்தை அவர்கள் பல ஆண்டுகளாக மயானமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் ராசிபுரம், கார்கூடல்பட்டியைச் சேர்ந்த தனியார் சிலர் நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.

அவர்கள், மலைவாழ்மக்கள் மயானத்துக்குச் செல்லும் பாதையை மறித்து முள்வேலி மூலம் அடைத்துள்ளனர். இதனால் மலைவாழ் மக்கள் மயானத்திற்கு செல்ல முடியவில்லை.

இது சம்மந்தமாக அவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடமும், கொல்லிமலை தாசில்தாரிடமும் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வேலி அமைத்துள்ள தனியார், அப்பகுதியில்உள்ள மலைவாழ் மக்களை மிரட்டும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் முள்வேலி அமைத்துள்ள பகுதியை முற்றுகையிட்டு உடனடியாக முள் வேலியை அகற்றித்தர வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!